உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரசு நெல் கொள்முதல் நிலையம் ஏற்படுத்த வலியுறுத்தல்

அரசு நெல் கொள்முதல் நிலையம் ஏற்படுத்த வலியுறுத்தல்

அரும்புலியூர்:அரும்புலியூரில், ஆண்டு முழுதும் செயல்படும் வகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஏற்படுத்த விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். அரும்புலியூர் குறுவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில், பினாயூர், சீட்டணஞ்சேரி, சாத்தணஞ்சேரி, ஆத்தங்கரை உள்ளிட்ட கிராமங்களில் பாலாற்று பாசனம் மூலம் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதேபோன்று, களியப்பேட்டை, திருவானைக்கோவில், காவிதண்டலம் உள்ளிட்ட கிராமங்களில் ஆழ்த்துளை கிணற்று பாசனத்திலும், அரும்புலியூர், பழவேரி, திருமுக்கூடல் உள்ளிட்ட கிராமங்களில் ஏரி மற்றும் கிணற்று பாசனம் மூலமாகவும் நெல் பயிரிடுகின்றனர். இப்பகுதிகளில் சம்பா, நவரை, சொர்ணவாரி என மூன்று போகம் நெல் பயிரிடும் நிலையில் நவரை பருவத்திற்கு குறிப்பிட்ட சில இடங்களிலும், சொர்ணவாரி பட்டத்திற்கு ஓரிரு இடங்கள் என, நெல் கொள்முதல் நிலையம் செயல்படுத்தப்படுகிறது. மற்ற நேரங்களில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை வெளிசந்தைகளிலும், நெல் வியாபாரிகளிடமும் விற்பனை செய்கின்றனர். இதனால், நெல்லுக்கான உரிய விலை கிடைக்காமல் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கூறி வருகின்றனர். எனவே, நெல் விளைச்சல் அதிகம் கொண்ட அரும்புலியூர் குறுவட்டத்தில் ஆண்டு முழுதும் செயல்படும் வகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரும்புலியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி