இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் அங்கன்வாடி மையம் அமைக்க வலியுறுத்தல்
ஓரிக்கை:ஓரிக்கையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் சிதிலமடைந்த அங்கன்வாடி மைய கட்டடம் இடிக்கப்பட்ட அதே இடத்தில், மீண்டும் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி, 46வது வார்டு, ஓரிக்கை, திரவுபதியம்மன் கோவில் அருகில், 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது. இங்கு 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்தனர். சிதிலமடைந்த நிலையில் இருந்த அங்கன்வாடி மைய கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன், சிதிலமடைந்த நிலையில் இருந்த அங்கன்வாடி மையம் இடிக்கப்பட்டது. ஆனால், மாற்று ஏற்பாடாக அங்கன்வாடி மையம், தற்காலிகமாக வாடகை கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்படவில்லை. ஐந்து ஆண்டுகளாக புதிய அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டுமானப் பணி துவக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன், புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுவதற்கு துறை அதிகாரிகள் இடத்தை அளவீடு செய்தனர். ஆனால், அடுத்தகட்ட பணி துவக்கப்படாமல் உள்ளது. இதனால், அங்கன்வாடி கட்டடம் இடிக்கப்பட்ட இடத்தில், செடிகள் வளர்ந்துள்ளன. அங்கன்வாடி மையம் இல்லாததால், இப்பகுதியில் உள்ள ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் சேர்க்க முடியாமல் பெற்றோர் பரிதவித்து வருகின்றனர். எனவே, ஓரிக்கையில், பழைய அங்கன்வாடி மையம் இடிக்கப்பட்ட அதே இடத்தில், புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.