துார்ந்து கிடக்கும் வடிகால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
செவிலிமேடு:காஞ்சிபுரம் செவிலிமேடு, இந்திரா நகரில், வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறுவதற்காக மாநகராட்சி சார்பில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால், மூன்றடி ஆழமுள்ள கால்வாயில் மண் திட்டுகளாலும், செடி, கொடிகள் வளர்ந்தும், குப்பை கழிவாலும் கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.இதனால், வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேற வழியில்லாமல், ஒரே இடத்தில் தேங்குவதால், இப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.மேலும், மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் குடியிருப்பு பகுதியை சூழும் நிலை உள்ளது.எனவே, மழைநீர் வடிகால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, செவிலிமேடு இந்திரா நகரினர் வலியுறுத்தி உள்ளனர்.