வாலாஜாபாத் ரயில்வே சாலையோரம் பள்ளம் மண் அணைத்து தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
வாலாஜாபாத்:வாலாஜாபாத்தில் இருந்து, தாம்பரம் செல்லும் சாலையில், வாலாஜாபாத் ரயில்வே பாலம் உள்ளது. இந்த ரயில்வே பாலம் வழியாக ஒரகடம், படப்பை, தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் மற்றும் ஊத்துக்காடு, புத்தகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இரவு, பகலாக பல்வேறு வாகனங்கள் இயக்கப்படுகின்றன.இவ்வாறு முக்கிய வழித்தடமாக உள்ள வாலாஜாபாத் ரயில்வே பாலம் மீது, வாகன ஓட்டிகள் மற்றும் பயணியர் பாதுகாப்பிற்கு போதிய வசதிகள் இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது.ஒரகடம் மார்க்கத்தில் இருந்து, ரயில்வே பாலம் வழியாக வாலாஜாபாத் நோக்கி வரும்போது, பாலத்தை கடந்த சாலையோர இருபுறமும் பள்ளமாக உள்ளது.இந்த சாலையோர பள்ளத்திற்கு இதுவரை தடுப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனால், இச்சாலை வழியாக பயணிப்போர் ஆபத்தான நிலையில் வாகனங்களை இயக்குவதோடு, இரவு நேரத்தில் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வாலாஜாபாத் ரயில்வே பாலத்தின் மீது இதுவரை மின்விளக்கு வசதி ஏற்படுத்தாமல் உள்ளது.எனவே, வாலாஜாபாத் ரயில்வே பாலத்தின் மீது மின்விளக்கு வசதி ஏற்படுத்தி, அச்சாலையின் இருபுறமும் மண் அணைத்து, தடுப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.