குளமாக மாறிய சாலை சீரமைக்க வலியுறுத்தல்
கீழம்பி:காஞ்சிபுரம் ஒன்றியம் கீழம்பியில் இருந்து ஆரியம்பெரும்பாக்கம், திம்மசமுத்திரம், கூரம் சித்தேரிமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு, அங்காளம்மன் கோவில் தெரு வழியாக சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. மேலும், விவசாய நிலத்தில் இருந்து வெளியேறும் மழைநீர், சாலை பள்ளத்தில் தேங்குவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தை கடக்கும்போது நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.அதேபோல், சாலை வழியாக நடந்து செல்லும் பாதசாரிகளும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சேதமடைந்த அங்காளம்மன் கோவில் தெருவை சீரமைக்கவும், மழைநீர் வடிகால்வாய் அமைக்கவும், கீழம்பி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.