பினாயூர் தாங்கல் கரையை துார்வாரி பலப்படுத்த வலியுறுத்தல்
பினாயூர்:பினாயூர் தாங்கல் கரையை துார்வாரி பலப்படுத்த பழவேரி கால்நடை பராமரிப்போர் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியம், பினாயூர் எல்லைக்கு உட்பட்ட தாங்கல், பழவேரி அருகே மலையடிவாரத்தில் உள்ளது. பழவேரி மற்றும் சீத்தாவரம் கிராமங்களில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு இந்த தாங்கல் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில், பல ஆண்டுகளாக பினாயூர் தாங்கல் துார்வாராததால், நீர் பிடிப்பு பகுதிகள் துார்ந்து மழைக்காலத்தில் குறைவான தண்ணீரே சேகரமாகிறது. மேலும், தாங்கல் கரை பகுதி பழுதாகி உள்ளதால் நீர் கசிவு ஏற்பட்டு மழை காலத்தை அடுத்து ஓரிரு மாதங்களில் வறண்டு போகும் நிலை உள்ளது. இதனால், அப்பகுதியில் நிலத்தடிக்கும் பயனின்றி கால்நடைகளுக்கும் தாங்கல் பயன்பாடு இல்லாமல் உள்ளது. எனவே, பினாயூர் தாங்கல் நீர் பிடிப்பு பகுதியை துார்வாரி, கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழவேரி மற்றும் சீத்தாவரம் கால்நடை பராமரிப்போர் வலியுறுத்தி வருகின்றனர்.