உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 4 பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவாளர்கள் பணியிடம் காலி ...சிக்கல்: தேங்கி கிடக்கும் விண்ணப்பங்களால் இடைத்தரகர்கள் ஆதிக்கம்

4 பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவாளர்கள் பணியிடம் காலி ...சிக்கல்: தேங்கி கிடக்கும் விண்ணப்பங்களால் இடைத்தரகர்கள் ஆதிக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், செங்கல்பட்டு பத்திரப்பதிவு மாவட்டங்களில், நான்கு சார் - பதிவாளர்கள் பணியிடம் காலியாக இருப்பதால், நிலங்களை பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகரித்து வருவதோடு, 'கட்டிங்' பெற்று விண்ணப்பங்களை பதிவு செய்வது அதிகரித்து வருவதாக, பயனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், தாமல், வாலாஜாபாத், காஞ்சிபுரம் இணை எண் - 1, இணை எண் - 2, இணை எண் - 4 ஆகிய ஐந்து பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இது தவிர, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், சாலவாக்கம், உத்திரமேரூர் ஆகிய சார் - பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. எல்லை நிர்வாக வசதிக்காக, பத்திரப்பதிவு மாவட்டம் வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தாமல், வாலாஜாபாத், காஞ்சிபுரம் இணை எண் - 1, இணை எண் - 2, இணை எண் - 4 ஆகியவை, காஞ்சிபுரத்தில் வருகின்றன. சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், சாலவாக்கம், உத்திரமேரூர் ஆகிய சார் - பதிவாளர் அலுவலகங்கள், செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் வருகின்றன. பொதுமக்களின் ஆவணங்களை கிரைய பதிவு, பரிவர்த்தனை, சுத்ததானம், குத்தகை, அடமானம், விடுதலை, தான செட்டில்மென்ட் பொது அதிகாரம் உள்ளிட்டவற்றுக்கு ஆவணங்கள் பதியப்படுகின்றன. அதேபோல், வில்லங்க சான்று வழங்குதல், திருமணம், பிறப்பு, இறப்பு சான்று வழங்குதல் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படுகின்றன. ஆவணங்கள் மேற்கண்ட சார் - பதிவாளர் அலுவலகங்களில் ஆண்டுதோறும் தலா, 9,000 ஆவணங்கள் முதல், 12,000 ஆவணங்கள் வரை பதிவு செய்யப்படுகின்றன. பத்திரப்பதிவு மூலம், இந்தாண்டு காஞ்சிபுரம் பத்திரப்பதிவு மாவட்டத்திற்கு, 300 கோடி ரூபாய்; செங்கல்பட்டு பத்திரப்பதிவு மாவட்டத்திற்கு, 500 கோடி என, வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால், காஞ்சிபுரம் பத்திரப்பதிவு துறை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் இணை எண் - 4 பதிவாளர் அலுவலகங்களில், சார் பதிவாளர்கள் இல்லை. அதேபோல, செங்கல்பட்டு பத்திரப்பதிவு மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார், சாலவாக்கம் ஆகிய சார் - பதிவாளர் அலுவலகங்களில், ஆறு மாதங்களாக சார் - பதிவாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், இந்த சார் -பதிவாளர் அலுவலகங்களில், ஆவணங்களை பதிவு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. பயனாளிகள் ஆன்லைனில் விண்ணப்பத்த பின், நேரில் விசாரித்து ஆவணங்களை பத்திரமாக பதிவு செய்ய பதிவாளர் இல்லாததால், பல மாதங்களாக விண்ணப்பங்கள் தேங்கி கிடக்கின்றன.

காத்திருப்பு

கூடுதல் பொறுப்பாக, மற்ற சார் - பதிவாளர் அலுவலகங்களில் வரும் பதிவாளர்கள், கடமைக்கென பத்திரப்பதிவு பணிகளை பார்க்கின்றனர்.இடைத்தரகர்கள் மூலம் 'கட்டிங்' வரும் விண்ணப்பங்கள், உதவியாளர் நிலையில் பணிபுரியும் ஊழியர்களின் சிபாரிசுக்கு மட்டும், பொறுப்பு பதிவாளர்கள் விரைவாக அனுமதி அளித்து, பத்திரங்களை பதிவு செய்வதாக, பயனாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பத்திரப்பதிவுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் பயனாளிகள் கூறியதாவது: பதிவுத் துறையில் உள்ள சார் - பதிவாளர் உள்ளிட்ட காலி பணியிடங்கள், ஆறு மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் ஆவணப் பதிவுக்கான 500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் போடப்பட்டுள்ளன.

நிலுவை

வாலாஜாபாதில் அவளூர், அய்யம்பேட்டை, முத்தையால்பேட்டை உள்ளிட்ட கிராமங்கள், ஸ்ரீபெரும்புதுாரில் மதுரமங்கலம், கண்ணன்தாங்கல், பண்ணுார் உள்ளிட்ட கிராமங்களிலும், நிலங்களை விற்கவும், வாங்கவும் சிக்கல் ஏற்படடுள்ளது. இடைத்தரகர்கள் அல்லது பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சிபாரிசு விண்ணப்பங்களுக்கு மட்டும் உடனடியாக பதிவு செய்யப்படுகிறது. பணம் கொடுக்காத விண்ணப்பங்களை, ஏதேனும் ஒரு காரணம் காட்டி நிலுவையில் போட்டு விடுகின்றனர். இதனால், நிலம் விற்போர், வாங்குவோருக்கு சிரமம் ஏற்படுகிறது. வங்கிகளில், வீட்டு கடன் பெறவும் முடியவில்லை.

அனுமதி

எனவே, காலியாக இருக்கும் பணியிடங்களை பூர்த்தி செய்து, தேங்கி கிடக்கும் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளித்து, பத்திரவுப்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். பத்திரப் பதிவு துறை ஊழியர் ஒருவர் கூறியதாவது: ஆவணங்களின் அடிப்படையில் பதிவு செய்து வருகிறோம். ஒரு சில ஆவணங்களை பதிவு செய்ய வரும் நபர்கள், அதிகாரிகளை தரக்குறைவாக பேசுவதால், கூடுதல் பொறுப்புக்கு நியமிக்கும் அதிகாரிகள் வருவதில்லை. இருப்பினும், ஆவணங்கள் நிலுவைகள் இன்றி பத்திரப்பதிவு செய்து விடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி