கும்பாபிஷேகத்திற்கு தனி நபர்களிடம் பணம் அளிக்க வேண்டாம் வல்லக்கோட்டை கோவில் நிர்வாகம் எச்சரிக்கை
ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.இக்கோவிலில், 2008ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் திட்டமிட்டனர்.அதன்படி, கோவில் நிதி மற்றும் உபயதாரர்கள் நிதி, 1.25 கோடி ரூபாய் மதிப்பில், கோவிலில் பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 17 ஆண்டுகளுக்கு பின் ஜூன் மாதம் 7ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.இந்த நிலையில், வல்லக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிலர், வாட்ஸாப் குழு வாயிலாக, பக்தர்களிடம் முறைகேடாக பணம் மற்றும் பொருட்கள் வசூல் செய்து வருவதாக கோவில் நிர்வாகத்திற்கு புகார் வந்தது.இதையடுத்து, கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், வல்லக்கோட்டை கோவில் பெயரைச் சொல்லியோ, நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்கள், தனிநபர்களிடம் பணம் மற்றும் பொருட்கள் கொடுத்து ஏமாற வேண்டாம்.பணம் வசூலிக்கும் தனிநபர்களை காவல்துறை வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.