வரதருக்கு ரூ.4.50 கோடியில் புதிய தேர் அடுத்த மாதம் திருப்பணி துவக்கம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோத்சவத்தின் ஏழாம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளும் வரதராஜ பெருமாள், நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வருவார்.வரதராஜ பெருமாள் பவனி வரும் மரத்தேர், 200 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டது. இத்தேரின் சில பாகங்கள் பழுதடைந்த நிலையில் இருந்ததால், கோவில் நிர்வாகம் சார்பில், கடந்த மார்ச் மாதம் தேர் சீரமைக்கும் பணி நடந்தது.இதில், தேரில் பழுதடைந்த பாகங்களும், சேதமடைந்த உதிரிபாகமும் புதிதாக மாற்றப்பட்டு சீரமைக்கப்பட்டது. வரதராஜ பெருமாள் கோவில் மரத்தேர் செய்யப்பட்டு, 200 ஆண்டுகளை கடந்த நிலையில், வரதராஜ பெருமாளுக்கு புதிய மரத்தேர் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, உபயதாரர் வாயிலாக, 4.50 கோடி ரூபாய் மதிப்பில், வரதராஜ பெருமாளுக்கு புதிய மரத்தேர் செய்யும் பணி துவங்க உள்ளது.இதுகுறித்து காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான ராஜலட்சுமி கூறியதாவது:தற்போது பயன்பாட்டில் உள்ள மரத்தேர், 63 அடி உயரமும், 25 அடி அகலமும், ஏழு நிலைகளை கொண்டது. உபயதாரர் வாயிலாக, 4.50 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக செய்யப்படும் மரத்தேரும், பழைய தேரின் அளவிலேயே செய்யப்பட உள்ளது.தேர் திருப்பணி, ஜூலை மாதம் துவங்கப்படும். தேரில் அடித்தளம் அமைக்கும் பணி ஆறு மாதத்தில் நிறைவு பெறும்.வரும் 2026ம் ஆண்டு வைகாசி பிரம்மோத்சவத்தின் தேரோட்டம் முடிந்தபின், பழைய தேரில் நன்கு உறுதியாக உள்ள பாகங்கள் புதிய தேருக்கு பயன்படுத்தப்பட உள்ளது.வரும் 2027ம் ஆண்டு வைகாசி பிரம்மோத்சவத்தில், வரதராஜ பெருமாள் புதிய மரத்தேரில் பவனி வருவார்.இவ்வாறு அவர் கூறினார்.