குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
உத்திரமேரூர்:கடல்மங்கலத்தில் உடைந்துள்ள குடிநீர் குழாயை சீரமைக்க, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடல்மங்கலம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள, குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க, தெருக்களின் ஓரங்களில் குழாய் புதைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆதிதிராவிடர் குடியிருப்பு, பிள்ளையார் கோவில் தெருவில் புதைக்கப்பட்டுள்ள குழாய் ஒன்று, உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. ஓராண்டாக உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்காமல், ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருந்து வருகிறது. உடைந்த குழாயில் இருந்து வெளியேறும் குடிநீரானது, குளம்போல் அங்கேயே தேங்கி நிற்கிறது. அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, கடல்மங்கலத்தில் உடைந்துள்ள குடிநீர் குழாயை சீரமைக்க, வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.