பிரதான குழாய் உடைப்பால் சீட்டணஞ்சேரியில் குடிநீர் வீண்
உத்திரமேரூர்: -சீட்டணஞ்சேரியில், பூமிக்கடியில் புதைக்கப்பட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. உத்திரமேரூர் தாலுகா, குருமஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது சீட்டணஞ்சேரி ஆதிதிராவிடர் குடியிருப்பு. இங்கு, 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து, பூமிக்கடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக, குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பழுதடைந்து இருந்த இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 2023ல், 80,000 ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இருந்தபோதிலும், தற்போது, இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முறையாக பராமரிப்பு இல்லாமல், பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மாதமாக உடைப்பு ஏற்பட்டுள்ள குழாயின் வழியே, குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால், சீட்டணஞ்சேரியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. குழாய் உடைந்து வெளியேறும் குடிநீர் அங்கேயே தேங்குவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சீட்டணஞ்சேரியில் உடைந்துள்ள, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் பிரதான குழாயை சீரமைக்க, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.