உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோடை வெயிலால் 211 ஏரிகளின் நீர் இருப்பு சரிந்தது...25 சதவீதம்: வயலுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கவலை

கோடை வெயிலால் 211 ஏரிகளின் நீர் இருப்பு சரிந்தது...25 சதவீதம்: வயலுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கவலை

காஞ்சிபுரம்:கோடை வெயில் அதிகரித்து வருவதால், 211 ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் குறைவாகவே நீர் இருப்பு உள்ளது. இதனால், ஏரி பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள், அடுத்த பருவத்திற்கு வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச சிரமம் ஏற்படும் என்பதால், கவலையில் உள்ளனர்.தமிழகம் முழுதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அடுத்த சில நாட்களில் அக்னி எனும் கத்திரி வெயில் துவங்க உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து வருகிறது.மாவட்டத்தில், நீர்வளத் துறை சார்பில், 381 ஏரிகள் உள்ளன. இதில், 211 ஏரிகளில், 25 சதவீதம் கீழாக தண்ணீர் இருப்பு குறைந்துவிட்டதாக, நீர்வளத் துறை தெரிவிக்கிறது.மீதமுள்ள ஏரிகளில், 62 ஏரிகளில் மட்டுமே 75 சதவீதமும், 108 ஏரிகளில் 50 சதவீதமும் தண்ணீர் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதில், 50 சதவீத நீர் இருப்பு உடைய ஏரிகளிலும், அடுத்த ஒரு மாதத்திற்குள் வெகுவாக தண்ணீர் குறையும் என்கின்றனர்.இதனால், விவசாயத்திற்கு மட்டுமல்லாமல், கால்நடைகள் குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றன.காஞ்சிபுரம் மாவட்டத்தில், தென்னேரி, உத்திரமேரூர், கோவிந்தவாடி, தாமல் போன்ற பெரிய ஏரிகளில் மட்டும், ஓரளவு தண்ணீர் உள்ளது.அடுத்த நிலையில் உள்ள ஏரிகளில் தண்ணீர் வெகுவாக வற்றி விட்டதால், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சொர்ணவாரி பருவத்திற்கு என்ன செய்வோம் என, விவசாயிகள் புலம்புகின்றனர்.நீர்வளத்துறையின் 381 ஏரிகள் மட்டுமல்லாமல், ஊரக வளர்ச்சி துறையின் ஏரிகளிலும், 2,100 குளங்களிலும் பெரும்பாலும் தண்ணீர் வற்றிவிட்டதால், நிலத்தடி நீர்மட்டமும் சரியும் அபாயம் ஏற்படுகிறது.கிராமப்புறங்களில், 'ஜல்ஜீவன்', கூட்டு குடிநீர் திட்டம் போன்ற திட்டங்களால், பெரும்பாலான இடங்களில் குடிநீர் பிரச்னை இன்றி, கிராமவாசிகள் வாழ்க்கையை நடத்துகின்றனர்.இருப்பினும் நீர்நிலைகளில் மேலும் தண்ணீர் குறைந்தால், குடிநீருக்கு சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது.ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை பெய்யும் என்பதால், நீர் தேவை ஓரளவு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.விவசாயிகள் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி துறை சார்பில், கிராம ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள தண்ணீர் மீன் வளர்க்கவும், தண்ணீர் சேமிக்கவும், கால்நடைகளுக்கு உணவு தயாரிக்கவும் என, பல வகையில் பயன்படுகிறது.அந்த பண்ணை குட்டைகளும் பெரும்பாலும் வறண்டு காட்சியளிக்கின்றன. கோடை வெயில் எதிரொலியாக, இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் விவசாயிகளுக்கும், கிராமமக்களுக்கும் ஏற்பட துவங்கியுள்ளது. அவ்வப்போது பெய்யும் கோடை மழையை சேமிக்கக்கூட, மழைநீர் கால்வாய்கள் முறையான கட்டமைப்போடு இல்லாதது, ஏரிகளுக்கு வரும் மழைநீரை தடுக்கிறது.மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பிலும், துார்ந்தும் கிடப்பதால், மழை பெய்யும் போதெல்லாம், பல ஏரிகள் நிரம்ப முடியாமல் போகிறது.காஞ்சிபுரத்தில், 1.20 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் ஏரிபாசனத்தை நம்பி உள்ளன. ஏரிகளை மட்டுமே நம்பி விவசாயம் செய்வோருக்கு, ஏரியில் தண்ணீர் வற்றி வருவதால், கவலை ஏற்படுகிறது.அதனால், நீர்வள ஆதாரத்துறையினர், ஏரிக்கு வரும் கால்வாய்களை கண்டறிந்து அவற்றை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைளை எடுத்தால் மட்டுமே, ஏரிகளை மழைக்காலங்களில் முழுமையாக நிரப்ப முடியும். கோடை வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தால், 25 சதவீதம் குறைவாக உள்ள 211 ஏரிகளிலும், சொட்டு தண்ணீர் கூட இல்லாத நிலை ஏற்படும் நிலை உருவாகி வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ