வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அடடே... ஜல்ஜீவன் லாரி ஜொலிக்குதுலே... மெடல் குத்தி உடுங்க.
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமம், நகரம் என, பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்னை தலைதுாக்குகிறது. பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டிகள், போதிய குடிநீர் சப்ளை இல்லாதது, ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாதது போன்ற காரணங்களால் கிராம, நகர மக்கள் குடிநீருக்கு சிரமப்பட்டு வருகின்றனர். பிரச்னையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோடை வெயிலின் தாக்கம் மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால், ஏரி, ஆழ்துளை கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளில் நிலத்தடி நீர் குறைந்து, குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் சில இடங்களில் குடிநீர் வினியோகம் சீராக இல்லாததால், டேங்கர் லாரியில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.காஞ்சிபுரம் தாயார் குளம், கணிகண்டீஸ்வரர் கோவில் தெரு, வளத்தீஸ்வரன் கோவில் தெரு, புதுப்பாளையம் தெரு, மண்டபம் தெரு, ஒற்றைவாடை தெரு, காவலான்கேட் உள்ளிட்ட பகுதிகளில், 15 நாட்களில், நான்கு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.காஞ்சிபுரத்தில் மேடான பகுதிகளான, தந்தை பெரியார் நகர், செட்டிகுளம் சிலார் தெரு, ராயன்குட்டை மேட்டுத்தெரு, பஞ்சுபேட்டை, அரக்கோணம் ரோடு, பெரிய காஞ்சிபுரம் தர்கா, என்.ஜி.ஓ., நகர் உள்ளிட்ட பகுதியில் வசிப்போரின் வீடுகளுக்கு, மாநகராட்சி லாரி வாயிலாக, ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படுகிறது.ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், சந்தவேலுார் ஊராட்சியில், சந்தவேலுார், ஆண்டாள் நகர், சித்துார், நரிக்குறவர் மேடு உள்ளிட்ட பகுதிகளில், 12,000க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும், ஆயிரக்கணக்காக ஊழியர்கள், இப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, வசித்து வருகின்றனர்.இப்பகுதிகளில், 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து போதிய அளவில் தண்ணீர் கிடைக்காததாலும், மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாகவும், இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது.வாலாஜாபாத் ஒன்றியம், கரூர் ஊராட்சி கட்டடம் அருகே, 'ஜல் ஜீவன்' திட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு வராததால், குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.அதேபோல, தென்னேரி கிராமம் மல்லிகாபுரம், தொழிலாளர் பகுதி ஆகிய இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டி உள்ளனர். இன்னும் இந்த தொட்டிகள் பயன்பாட்டிற்கு வராததால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கிராமத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.உத்திரமேரூர் ஒன்றியம், விசூர் கிராமத்திற்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வாயிலாக வினியோகிக்கப்படும் நீர், உப்புத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. இதில் சமைத்தால், உணவில் உப்புத்தன்மை அதிகமாக காணப்படுகிறது. குடிக்கவும் முடிவதில்லை.பொதுமக்கள் கூறியதாவது:ஊராட்சிகளில் குழாய் உடைப்பு, மின் மோட்டார் பழுதால், அவ்வப்போது குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்படுகிறது. தவிர, 'ஜல்ஜீவன்' திட்ட பணி முடிந்தும், அதை நடைமுறைப்படுத்தாமல் உள்ளனர்.சில இடங்களில், தண்ணீரில் உப்புத்தன்மை அதிகமாக உள்ளது. அதனால், அதை பயன்படுத்த முடிவதில்லை. சில இடங்களில் குறைவான அளவிலே தண்ணீர் தரப்படும். கோடை போல் வெயில் கொளுத்தி வரும் நிலையில், குடிநீர் பற்றாக்குறை பிரச்னை, ஆங்காங்கே எழுகிறது. அது தீவிரம் அடையும் முன், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தடையின்றி குடிநீர் வினியோகிக்க, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.குடிநீர் பற்றாக்குறை போக்க செய்யாறு, பாலாற்றில் இருந்து, பைப்லைன் வாயிலாக குடிநீர் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்னை தொடர்பாக, ஊரக வளர்ச்சித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனைத்து ஊராட்சிகளிலும், 'ஜல் ஜீவன்' திட்டத்தின் வாயிலாக குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் குடிநீர் பிரச்னை தொடர்பாக வரும் புகார்களை உடனுக்குடன் சரி செய்ய வாரந்தோறும் நடக்கும் ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கிறோம்' என்றார்.- நமது நிருபர் குழு -
அடடே... ஜல்ஜீவன் லாரி ஜொலிக்குதுலே... மெடல் குத்தி உடுங்க.