பாலாறில் தண்ணீர் திறப்பு
அரும்புலியூர்: பழையசீவரம் பாலாறு தடுப்பணையில் இருந்து, அரும்புலியூர் ஏரிக்கு நீர்வளத்துறை சார்பில் நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூரில், நீர் வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ், 450 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரி, மழைக் காலத்தில் முழுமையாக நிரம்பினால், அத்தண்ணீரை கொண்டு அரும்புலியூர், சீத்தாவரம், காவணிப்பாக்கம், கரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, 600 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும். இந்த ஏரிக்கு பழைய சீவரம் பாலாறு தடுப்பணையில் இருந்து பிரிந்து செல்லும் துணைக் கால்வாய் உள்ளது. தடுப்பணை நிரம்பி வழிந்தால், இக்கால்வாய் வாயிலாக தண்ணீர் சென்று, அரும்புலியூர் ஏரி நிரம்ப வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாலாறு தடுப்பணையில் இருந்து, அரும்புலியூர் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் கரையின் ஒரு பகுதி மண் அரிப்பால் சேதம் அடைந்து இருந்தது. இதனால், பாலாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணை நிரம்பியும் ஏரிக்கு தண்ணீர் திறக்க இயலாத நிலை இருந்தது. இதனிடையே, சேதமான அக்கால்வாயின் கரை பகுதியில் கடந்த வாரம் மணல் மூட்டைகள் போட்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பணி நிறைவு பெற்றதையடுத்து, காஞ்சிபுரம் நீர்வளத்துறை பொறியாளர் மார்கண்டேயன் முன்னிலையில் பழையசீவரம் பாலாறு தடுப்பணையில் இருந்து அரும்புலியூர் ஏரிக்கு நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. உத்திரமேரூர் நீர்வளத்துறை உதவி பொறியாளர் கண்ணன் மற்றும் அரும்புலியூர் ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.