காஞ்சி கலெக்டர் வளாகத்தில் ஆங்கில சிகிச்சை மீண்டும் வருமா?
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில், சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் நிலையில், ஆங்கில மருத்துவ சிகிச்சையும் வழங்க வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர். காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில், சித்த மருத்துவமனை ஒரு சிறிய அறையில் செயல்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்துடன் கூடிய ஆங்கில மருத்துவ சிகிச்சையும், கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு முன்பாக அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கொரோனா பரவல் குறைந்த பிறகு, சித்த மருத்துவ சிகிச்சை மட்டுமே இங்கு அளிக்கப்படுகிறது. சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க, திங்கட்கிழமை, புதன்கிழமை ஆகிய இருநாட்கள் மருத்துவர் வந்து செல்கிறார். சித்த மருத்துவத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகள், தொடர்ந்து இங்கு புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். ஆனால், ஆங்கில மருத்துவ சிகிச்சையை பலரும் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே, ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததால், விரைவாக அந்த சிகிச்சையும் துவக்க வேண்டும் என, காஞ்சிபுரம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.