பஸ் நிறுத்தத்தில் கும்மிருட்டு உயர்கோபுர விளக்கு அமையுமா?
வாலாஜாபாத் : காஞ்சிபுரம்- - செங்கல்பட்டு சாலையில், பழையசீவரம் மலை பேருந்து நிறுத்தம் உள்ளது. பழையசீவரம் மற்றும் திருமுக்கூடலை சுற்றி புல்லம்பாக்கம், வயலக்காவூர், அருங்குன்றம், பட்டா, சிறுதாமூர், சிறுமையிலுார், சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இக்கிராம மக்கள் பழையசீவரம் மலை பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். பேருந்து நிறுத்தத்தில் நள்ளிரவு வரை பயணியர் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ளது. இரவு 10:00 மணி வரையிலும், அதிகாலை நேரத்திலும் பெண் தொழிலாளர்கள் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, தொழிற்சாலை வேன் மற்றும் பேருந்துக்காக காத்திருக்கின்றனர். இந்த பேருந்து நிறுத்தத்தில் போதுமான மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பெண் தொழிலாளர்கள், பயணியர் அவதிப்படுவதோடு வழிப்பறி சம்பவங்கள் நடக்கக்கூடும் என அச்சப்படுகின்றனர்.எனவே, பழைய சீவரம் மலை பேருந்து நிறுத்தத்தில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.