படப்பையில் மேம்பால பணியால் நெரிசல் கனரக வாகனத்திற்கு தடை விதிக்கப்படுமா?
படப்பை,:வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.இந்த சாலையில், படப்பை பஜாரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி, 2022 ஜனவரியில் துவங்கி, ஆமை வேகத்தில் நடக்கிறது.பாலம் கட்டுமான பணிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டதால், சாலை குறுகலாகி உள்ளது.இந்நிலையில், வாலாஜாபாதில் இருந்து ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு, தினமும் ஏராளமான லாரிகள் படப்பையை கடந்து வண்டலுார், தாம்பரம் அதன் சுற்றுப்புறங்களுக்கு செல்கின்றன.இதனால், வழக்கத்தைவிட இரு மடங்கு போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:லாரிகள் அதிக அளவில் செல்வதால், படப்பை பஜார் பகுதியை கடந்து செல்லவே அச்சமாக உள்ளது.மேம்பாலம் கட்டுமான பணி முடியும் வரை, படப்பை பஜார் வழியே கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்.இந்த சாலையில் வரும் கனரக வாகனங்கள், ஒரகடத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் - - மணிமங்கலம் சாலையை பயன்படுத்தி, படப்பை அருகே கரசங்கால் அல்லது முடிச்சூர் வழியாக தாம்பரம் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.