உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அடையாறு ஆற்றுக்கு உபரிநீர் செல்லும் 2 இணைப்பு கால்வாய் பணிகள் மந்தம்

அடையாறு ஆற்றுக்கு உபரிநீர் செல்லும் 2 இணைப்பு கால்வாய் பணிகள் மந்தம்

படப்பை: படப்பை அருகே அடையாறு ஆற்றுக்கு ஏரிகளின் உபரிநீரை கொண்டு செல்ல, இரண்டு இணைப்பு கால்வாய் அமைக்கும் பணிகள் மந்தகதியில் நடந்து வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே ஒரத்துாரில் துவங்கும் அடையாறு கிளை கால்வாய், கரசங்கால் அருகே ரூபி அடுக்குமாடி குடியிருப்பை கடந்து, அடையாறு கால்வாயில் இணைகிறது. இந்த கால்வாய் வழியே, மழை காலத்தில், 30க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரி நீர் செல்லும். இதேபோல், மணிமங்கலம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், கரசங்கால் வழியே சென்று, ரூபி அடுக்குமாடி குடியிருப்பு அருகே செல்லும் ஒரத்துார் கிளை கால்வாயில் இணைந்து, அடையாறை சென்றடைகிறது. இந்நிலையில், ரூபி அடுக்குமாடி குடியிருப்பு பின்புறம் உள்ள கால்வாய் வழியே, காலம் காலமாக வெள்ள நீர் சென்று வந்த நிலையில், அங்கு மழை நீர் செல்லும் கால்வாய் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம் என கூறப்படுகிறது. தனியார் நில உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால், தனியார் நிலத்தில் செல்லும் கால்வாய்க்கு பதிலாக, மாற்று கால்வாய் அமைக்கும் பணியில் நீர்வளத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, 35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, புதிய கால்வாய் அமைக்கும் பணிகள், இரண்டு மாதமாக நடந்து வருகின்றன. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ரூபி அடுக்குமாடி குடியிருப்புக்கு பின்னால் சென்ற கால்வாய்க்கு மாற்றாக, அடுக்குமாடி குடியிருப்பின் முன்னால் வண்டலுார் - -வாலாஜாபாத் நெடுஞ்சாலையோரம், 320 மீட்டர் நீளத்திற்கு பள்ளம் தோண்டி புதிய 'கட் அண்டு கவர்' கால்வாய் அமைக்கப்படுகிறது. இதேபோல், மணிமங்கலம் ஏரியின் உபரி நீர் கால்வாயை, அடையாறு கால்வாயுடன் நேரடியாக இணைக்கும் வகையில், கரசங்கால் ஊராட்சிக்குட்பட்ட ஏ.ஆர்.கே., நகரில் உள்ள தெருவில், 220 மீட்டர் நீளத்திற்கு பள்ளம் தோண்டி 'கட் அண்டு கவர்' கால்வாய் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இந்த பணிகளை, வடகிழக்கு பருவமழைக்கு முன்பே முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது பருவமழை துவங்கியுள்ள நிலையில், இன்னும் பணிகள் முடியாமல் மந்தகதியில் நடக்கின்றன. இதனால், கால்வாய் கட்டுமானப் பணி நடக்கும் இடம் சேறும், சகதியுமாக உள்ளதால், அங்குள்ள மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !