உத்திரமேரூரில் சிறு மழைக்கே சகதியான பணிமனை கான்கிரீட் தளமாக மாற்ற பணியாளர்கள் வலியுறுத்தல்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகம், நேற்று முன்தினம் இரவு பெய்த சிறு மழைக்கே சகதியாக மாறியுள்ளது. எனவே, கான்கிரீட் தரைதளமாக மாற்ற பணியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். உத்திரமேரூரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, நடத்துநர், ஓட்டுநர், எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பணிமனையில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு தினமும் 38 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பணிமனை வளாகத்தில் நீண்ட ஆண்டுகளாக கான்கிரீட் தளம் அமைக்கப்படாமல், மண் தரையாகவே உள்ளது. இந்நிலையில், உத்திரமேரூரில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இங்கு, பேருந்துகள் தொடர்ந்து வந்து செல்வதால், பணிமனை வளாகம் சகதியாக மாறியுள்ளது. இதனால், துாய்மைப்படுத்தப்பட்டு வெளியே வரும் பேருந்துகளும், சகதி நீர் பட்டு அசுத்தமாக மாறுகின்றன. எனவே, உத்திரமே ரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில், கான்கிரீட் தளம் அமைக்க, பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.