நன்கு தெரிந்தவர்களால் மட்டுமே சிறுமிகளுக்கு பிரச்னை ஏற்படுகிறது சொல்கிறார் அமைச்சர் கீதாஜீவன்
நாகர்கோவில:''நன்கு தெரிந்தவர்களால் மட்டுமே பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பிரச்னைகள் ஏற்படுகிறது'' என அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.நாகர்கோவிலில் அவர் கூறியதாவது:பொதுவாக சிறுமிகள் மற்றும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை வெளியே சொல்வதற்கு தயங்குகிறார்கள். அது பெரிதான பிறகுதான் பெற்றோருக்கே விஷயம் தெரிய வருகிறது. பிரச்னைகள் குறித்து பெற்றோர் மற்றும் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு இதில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அதிகமான புகார்கள் வருவதால் அதிக குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர். இதுவரை வெளி வராத தகவல்களும் வெளிவரும். பொதுவாக நன்கு தெரிந்தவர்கள் மூலம் மட்டுமே பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு துன்புறுத்தல் ஏற்படுகிறது. அலைபேசி போன்ற பொருட்களை பாதுகாப்பாக கையாள வேண்டும்.அறிவாலயத்தின் செங்கலை உருவுவேன் என்று அண்ணாமலை வாய்ச்சவடால் பேசுகிறார். பொதுவாக அவர் எதையாவது பேசுவார். பின்னர் அதை வாபஸ் பெற்று விடுவார். அவர் சொன்னது எதையும் சாதித்ததில்லை .இவர் போல் பேசியவர்கள் அழிந்ததுதான் சரித்திரம். தி.மு.க.,வை யாராலும் அசைக்க முடியாது.மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள், குழந்தைகளுக்கு சொல்ல முடியாத பாலியல் துன்புறுத்தல் இருந்து வருகிறது. பா.ஜ., வால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. அதை சரி செய்த பின்னர் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை பற்றி பா.ஜ., பேசட்டும். நடிகர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களோடு மக்களாக பயணித்தால் மட்டுமே அவர்களின் பிரச்னைகளை தெரிந்து கொள்ள முடியும் என்றார்.