வெளிநாட்டு வேலை என ரூ.63 லட்சம் மோசடி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்கு
நாகர்கோவில்:நாகர்கோவில் கோட்டார் சிதம்பர நகர் பகுதியைச் சேர்ந்தவர் சி. ஆர். செல்வம் 39. இவர் நாகர்கோவில் உள்ள ஒரு கல்லுாரியில் தற்காலிக பேராசிரியராக உள்ளார். இவரது நண்பர் ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மிக்கேல் சவரி முத்து 54. சவரி முத்துவின் மகன் லியோ சவுதி அரேபியாவில் பணியாற்றி வருவதாகவும், அங்குள்ள பிரபல மாலில் தற்போது 115 பேர் வேலைக்கு தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து தனது நண்பர்கள் ,உறவினர்கள் பலருக்கு வேலை கிடைக்கும் என்று கூறி ரூ. 63 லட்சத்து 16 ஆயிரம் வசூலித்து சவரி முத்துவிடம் , செல்வம் கொடுத்துள்ளார். ஆனால் யாரையும் சவரி முத்து வேலைக்கு அனுப்பி வைக்க வில்லை. இது தொடர்பாக செல்வம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி சவரிமுத்து, மனைவி எல்சி ராணி 51, மகன்கள் காட்வின் லிஜோ 25, சுபின் சார்லஸ் 21, மகள் வின்சியா 20 ஆகிய ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.