கல் குவாரியில் விதிமீறல் கவுன்சிலருக்கு கம்பி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே கடையால் கட்டச்சல் பகுதியில், சில ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்த கல் குவாரி சில மாதங்களுக்கு முன் மீண்டும் செயல்பட தொடங்கியது. இங்கு, பாறை உடைக்க அனுமதி இல்லை. ஆனால், வெளியில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டு, ஜல்லி தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. தகவலில், எஸ்.பி., ஸ்டாலின் தலைமையில் அங்கு ஆய்வு நடந்தது. அப்போது, விதிமீறி பாறைகள் உடைக்கப்பட்டது உறுதியானது. அங்கிருந்த ஸ்டாலின், 41, என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர், கடையாலுமூடு பேரூராட்சி 18வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர். இதுதொடர்பாக, கடையால் பிலாந்தோட்டத்தைச் சேர்ந்த குமார், நில உரிமையாளர் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்விவகாரத்தில் கடையாலுமூடு போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டு உட்பட இரண்டு பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.