மஸ்கட்டில் இருந்தபடி நாகர்கோவில் வீட்டில் கொள்ளையர்களை விரட்டிய உரிமையாளர்
நாகர்கோவில்:தனது வீட்டில் புகுந்த திருடனை சி.சி.டி.வி., காட்சியில் கண்ட உரிமையாளர் வெளிநாட்டில் இருந்து கொண்டே அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் விரட்டியடித்தார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு ரஹமத் கார்டனை சேர்ந்தவர் சலீம் 58. இவரது மகன் மஸ்கட்டில் இன்ஜினியராக பணிபுரிகிறார். கடந்த வாரம் தனது மகனை பார்ப்பதற்காக குடும்பத்துடன் சலீம் மஸ்கட் சென்றார்.வீட்டில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டிருந்ததால் வெளிநாட்டில் இருந்த நிலையிலும் அடிக்கடி கேமராவை கண்காணித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு 11: 45 மணிக்கு 2 பேர் முகமூடி அணிந்து வீட்டுக்குள் நடமாடுவதை கண்டார். இருவரும் கையுறை அணிந்திருந்தனர். வீட்டில் ஒவ்வொரு அறையாக சென்று கதவை உடைக்க முயற்சித்தனர்.இதை பார்த்த சலீம் உடனடியாக பக்கத்து வீட்டில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு தனது வீட்டுக்குள் இரண்டு கொள்ளையர்கள் புகுந்துள்ள தகவலை கூறியுள்ளார்.அவர்களும் வீட்டில் இருந்து வெளியே வந்து திருடன் திருடன் என்று கூச்சலிட்டனர். இதனால் கொள்ளையர்கள் பின் கதவை திறந்து பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்து தப்பி சென்று விட்டனர்.கோட்டார் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். உரிய நேரத்தில் கேமராவில் திருடர்களை கண்டதால் நகைகள் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.