சீனாவில் மருத்துவம் படித்த மகன் தந்தையை கொன்றதால் கைது
நாகர்கோவில்:மருத்துவ படிப்பை பாதியில் விட்டதால், ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் தந்தையை வெட்டிக்கொன்ற மகன் போலீசில் சரணடைந்தார்.கேரள தமிழக எல்லையான வெள்ளறடையை சேர்ந்தவர் ஜோஸ், 70. மனைவி சுஷமகுமாரி. இவர்களது ஒரே மகன் பிரஜின், 28. சீனாவில் எம்.பி.பி.எஸ்., படித்து வந்தார். கொரோனா காலத்தில் படிப்பை பாதியில் விட்டு, ஊர் திரும்பியவர் பின் செல்லவில்லை. இந்த படிப்புக்காக ஜோஸ் அதிக அளவில் பணம் செலவழித்து இருந்தார்.இதனால் தந்தை, மகனுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவில், மீண்டும் பிரச்னை ஏற்பட்டபோது, தந்தையை அரிவாளால் வெட்டி பிரஜின் கொலை செய்தார். இதைப் பார்த்த தாய் சுஷமகுமாரி மயக்கம் போட்டு விழுந்தார். வெள்ளறடை போலீசில், பிரஜின் சரணடைந்தார். போலீசார் வந்து சுஷமகுமாரியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.தன்னை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காததால், தந்தையை கொலை செய்ததாக பிரஜின் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.