குளித்தலையில் அரசு பஸ் மீது கார் மோதிய கோர விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் பலி
குளித்தலை, பிப். 27- -கரூர் மாவட்டம், குளித்தலையில் நேற்று அதிகாலை அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில், கோவிலுக்கு சுவாமி கும்பிட சென்ற, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு உள்பட ஐந்து பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.கோவை, குனியமுத்துார் சுகுணாபுரம் காந்தி நகரை சேர்ந்த செல்வராஜ், 50; பெயின்டர். இவர் தன் மனைவி கலையரசி, 45, மகள் அகல்யா, 25, மகன் அருண்குமார், 22, மற்றும் அருண்குமாரின் நண்பரும், கார் டிரைவருமான ஈரோடு வில்லியாபுரம் பாரதிநகர் விஷ்ணு, 24, ஆகியோர் ஒரத்தநாடு அருகே கீழையூரில் உள்ள அக்னி வீரனார் கோவிலுக்கு சுவாமி கும்பிட, நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து மாருதி செலிரியோ காரில் புறப்பட்டனர்.இவர்களுக்கு முன்னால், செல்வராஜின் உறவினர்கள் கோவிலுக்கு வேனில் சென்றனர். வேனை தொடர்ந்து கார் சென்று கொண்டிருந்தது. அதிகாலை, 2:00 மணியளவில், திருச்சி - -கரூர் தேசிய நெடுஞ்சாலையில், கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள தனியார் பள்ளி அருகில், அறந்தாங்கியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பஸ் மீது, கார் நேருக்கு நேராக மோதியது. இந்த விபத்தில் கார், அப்பளம் போல் நொறுங்கியது.காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள், மகன் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர்.காரில் பயணம் செய்தவர்களின் உடல்களை போலீசாரால் மீட்க முடியாததால், முசிறி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, ஐந்து பேரின் உடல்களையும் மீட்டனர். பின், குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.கரூர் கலெக்டர் தங்கவேல், எஸ்.பி.,பொரோஸ்கான் அப்துல்லா, திருச்சி, கரூர் அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர்கள் முத்துகிருஷ்ணன், சிவசங்கரன் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில், ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.==================