| ADDED : ஜூலை 15, 2011 12:01 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களில் பொதுமக்களிடம் இருந்து புகார் பெறுவதற்காக தனியாக வரவேற்பு அறை அமைக்க எஸ்.பி., நாகராஜன் உத்தரவிட்டுள்ளார். கரூர் நகரில் நாள்தோறும் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க சிக்னல்களில் வைக்கப்பட்டுள்ள நேரத்தை குறைத்தல், கரூர் ரவுண்டனாவை சுற்றி பேரிகார்டுகள் வைத்து, பொதுமக்கள் வசதிக்காக நடைபாதை அமைத்தல், விபத்துகளை தடுக்கும் வகையில் கரூர் நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கார் மற்றும் வேன் ஸ்டாண்ட்டுகளை வேறு இடத்துக்கு மாற்றியது போன்ற நடவடிக்கைகளை எஸ்.பி., நாகராஜன் அதிரடியாக செய்தார். இதையடுத்து தற்போது மாவட்டத்தில் உள்ள 16 சட்டம் ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன் மற்றும் இரண்டு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில், பொதுமக்களிடம் இருந்து புகார் பெறுவதற்காக தனி வரவேற்பு அறை ஏற்படுத்த எஸ்.பி., நாகராஜன் உத்தரவிட்டுள்ளார். போலீஸ் ஸ்டேஷன்களில் அமைக்கப்படும் தனி வரவேற்பு அறைகளில் பெண் போலீஸார் ஷிப்ட் முறையில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பணியில் இருப்பார்கள். தனி வரவேற்பு அறையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் தர வரும் பொதுமக்களை அமர வைத்து பிரச்சனைகள் கேட்டறிந்து, புகார் மனு எழுதவும், புகாரை எந்த அதிகாரிகளிடம் கொடுப்பது உள்ளிட்ட ஆலோசனை வழங்கப்படுகிறது. எஸ்.பி., நாகராஜன் உத்தரவுபடி கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அமைக்கப்பட்ட வரவேற்பு அறையில் நேற்று முதல்பெண் போலீஸார், புகார் கொடுக்க வந்த பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கும் பணியில் ஈடுப்பட்டனர். மாவட்டத்தில் உள்ள மற்ற போலீஸ் ஸ்டேஷன்களில் படிப்படியாக வரவேற்பு அறை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரம் அடைந்து வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் பொதுமக்கள் வசதிக்காக வரவேற்பு அறை அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.