சின்னதாராபுரம் தாலுகா அறிவிப்புபட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்ப்பு
சின்னதாராபுரம் தாலுகா அறிவிப்புபட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்ப்பு கரூர்:-கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், மண்மங்கலம், புகழூர் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. இதில், மிகவும் பின்தங்கிய கிராம பகுதியாக, போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத தென்னிலை, க.பரமத்தி உள்வட்டங்களை இணைத்து சின்னதாராபுரத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய தாலுகாவாக அறிவிக்க அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சின்னதாராபுரம் தனி தாலுகா அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: நஞ்சை காளக்குறிச்சி, நடந்தை தென்பாகம், எலவனுார், ராஜபுரம், தும்பவாடி உள்பட பல்வேறு கிராமங்கள், தொலைவில் உள்ள அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது. அதுபோல, க.பரமத்தி, தென்னிலை, அஞ்சூர், கார்வழி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் புகழூர் தாலுகாவிற்கு செல்ல வேண்டும். இங்கிருந்து செல்ல போதுமான பஸ் வசதியில்லாததால், குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.புகழூர் தாலுகா தொடங்கப்பட்ட பின், அரவக்குறிச்சி தாலுகாவில் இருந்து பல பகுதிகள் புகழூர் தாலுகாவிற்கு இணைக்கப்பட்டு விட்டன. இதனால், தாலுகா பணிக்காக ஒருவர், 50 கி.மீ., மேல் துாரம் பயணம் செய்வதால், பணியில் உள்ளவர்கள் விடுமுறை எடுக்க வேண்டிய நிலையும், அலைச்சலும் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் வசதிக்காக சின்ன தாராபுரத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு கூறினர்.