பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி கூடைப்பந்து போட்டியில் முதலிடம்
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி குறு வட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில், பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி, புன்னம்சத்திரம் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. போட்டியை கரூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சிவா துவக்கி வைத்தார். 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில், முதல் போட்டியில் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியுடன், 12-8 என்ற புள்ளிக் கணக்கிலும், இறுதிப் போட்டியில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியுடன், 10-2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.இதேபோல, 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் முதல் போட்டியில், அரவக்குறிச்சி மேல்நிலைப் பள்ளியுடன் 22-4 என்ற புள்ளிக் கணக்கிலும், இறுதி போட்டியில் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியுடன் 24-6 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் குறுவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் மற்றும் பள்ளப்பட்டி எஜுகேஷன் சொசைட்டி உறுப்பினர்கள், தலைமையாசிரியர், இருபால் ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.