கண்டக்டர் மீது தாக்குதல்: 6 பேர் போலீசில் ஒப்படைப்பு
கண்டக்டர் மீது தாக்குதல்: 6 பேர் போலீசில் ஒப்படைப்புகுமாரபாளையம்:பள்ளிப்பாளையத்திலிருந்து, குமார பாளையம் நோக்கி, நேற்று மாலை, 4:00 மணிக்கு அரசு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. டிரைவராக பழனியப்பன், கண்டக்டராக ரஞ்சித்குமார் பணியில் இருந்தனர். சீராம்பாளையம் பஸ் ஸ்டாப்பில், கரும்பு வெட்டும் வடமாநில தொழிலாளர்களான, ஆறு பேர் பஸ்சில் ஏறினர். அவர்களிடம் கண்டக்டர் ரஞ்சித்குமார், டிக்கெட் வாங்குமாறு கூறியுள்ளார். அப்போது அவர்கள், 'பின்னால் இருப்பவர்கள் வாங்குவார்கள்' என, தெரிவித்துள்ளனர். பின்னால் சென்று கேட்டபோது, 'முன்னால் இருப்பவர்கள் வாங்குவார்கள்' என, ரஞ்சித்குமாரை அலையவிட்டுள்ளனர்.பின், ஆறு பேருக்கும் ஒரே டிக்கெட்டாக, கண்டக்டர் ரஞ்சித்குமார் கொடுத்துள்ளார். அதை வாங்கிய வடமாநில நபர்கள், தனித்தனி டிக்கெட்டாக கொடுக்குமாறு கேட்டு அவரை தாக்கி உள்ளனர். உடன் பயணித்த பயணிகள் தட்டிக்கேட்டபோது, அவர்களையும் மிரட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், அந்த வடமாநில நபர்கள், ஆறு பேரை பிடித்து, குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.