பள்ளப்பட்டி வாரச்சந்தையில்சாலை ஆக்கிரமிப்பால் அவதி
பள்ளப்பட்டி வாரச்சந்தையில்சாலை ஆக்கிரமிப்பால் அவதிஅரவக்குறிச்சி:கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி நகராட்சி அமைந்துள்ளது. இங்கு, 50,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பள்ளப்பட்டி நகராட்சி பொது சாலையில், திங்கள் தோறும் வாரச்சந்தை கூடுகிறது. இந்த சாலையில், ஆர்.ஐ., அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம், தபால் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் முக்கிய சாலையாகவும் உள்ளது.இந்நிலையில், திங்கள் தோறும் கூடும் வாரச்சந்தையில், வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், வேலைக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.சில நேரம் விபத்தும் நடக்கிறது. இந்த சாலையை ஒட்டி, சந்தை வளாகம் உள்ளது. இங்கு கடை அமைக்க போதுமான இட வசதி இருந்தும், சாலையிலேயே கடைகளை விரிப்பதால், இந்த நிலைமை ஏற்படுகிறது. சந்தை வளாகத்தை வியாபாரிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.