உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில், 58,565 பேர் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கவில்லை

கரூரில், 58,565 பேர் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கவில்லை

'கரூரில், 58,565 பேர் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கவில்லை'கரூர், :கரூர் மாவட்டத்தில், 58,565 பேர் பொங்கல பரிசு தொகுப்பு வாங்கவில்லை.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. 2020ல், 1,000 ரூபாய், 2021ல், 2,500, 2023ல், 1,000, 2024ல், 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. ரொக்கமும் சேர்த்து வழங்கப்பட்டதால், கடந்த ஆண்டுகளில் அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். ஆனால் இந்தாண்டு, பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒருமுழு கரும்பு ஆகிய மூன்று பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன. ரொக்க பணம் வழங்கப்படாததால் மக்களிடையே ஆர்வம் குறைந்தது.கரூர் மாவட்டத்தில் மொத்தம், 637 ரேஷன் கடைகள் உள்ளன. மூன்று லட்சத்து, 31 ஆயிரத்து, 513 கார்டுதாரர்கள், பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகளாக உள்ளனர். இவர்களுக்கு, கடந்த, 3 முதல் டோக்கன் வழங்கப்பட்டது. அனைத்து ரேஷன் கடைகளிலும், 9 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் துவங்கியது. ரொக்க பணம் இல்லாததால், கரூர் மாவட்ட ரேஷன் கார்டுதாரர்கள், பரிசு தொகுப்பு பெற ஆர்வம் காட்டவில்லை. வழக்கமான பச்சரிசி, சர்க்கரைதானே, இதற்காக நேரம் ஒதுக்கவேண்டுமா என, பலரும் பரிசு தொகுப்பு வாங்காமலேயே விட்டுவிட்டனர்.இதுவரை மொத்த பயனாளிகளில், 82.33 சதவீதம் பேர், அதாவது, இரண்டு லட்சத்து, 72 ஆயிரத்து, 948 பேர் மட்டுமே பரிசு தொகுப்பு பெற்றிருந்தனர். இன்னும், 53 ஆயிரத்து, 565 பேர் பரிசு தொகுப்பு பெறவில்லை. 50 சதவீதம் பேர் கூட வாங்காத கடைகளில், கையில் இருப்பு உள்ள பொங்கல் தொகுப்பை வினியோகம் செய்ய வேண்டும் என, அதிகாரிகள் தரப்பில் நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், பொங்கல் தொகுப்பு வாங்கவில்லை என்றால் சிக்கல் போன்ற தகவல்களை, ரேஷன் பணியாளர்கள் தரப்பில் இருந்து வாட்ஸ் ஆப் குரூப் உள்பட சமூக வலைதளங்களில் பரப்பினர்.குறிப்பாக, கரூர் வட்டாரம் மூக்கணாங்குறிச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட கந்தசாரப்பட்டி ரேஷன் கடையில், பெரும்பாலானவர்கள் பொங்கல் பரிசு வாங்கவில்லை. இதையடுத்து, 'இன்னும் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காமல் உள்ளீர்கள். வரும் காலங்களில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு தகுதி இல்லாமல் போய்விடும்' என, வாட்ஸ் ஆப் குருப்பில் பதிவிடப்பட்டது.இது குறித்து, கரூர் வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில்,'' பொங்கல் பரிசு வாங்கவில்லை என்றால், அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாது என, எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை கண்டு நம்ப வேண்டாம். மாவட்டத்தில் பெரும்பாலான ரேஷன் கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி உள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ