கரூர், தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார், 393 நாட்களாகவும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 31 நாட்களாகவும் தலைமறைவாக உள்ளனர். கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் அரசியல்வாதிகளால், போலீஸ் உயர் அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சரான செந்தில்பாலாஜி, முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, 2023 ஜூன் 14ல் அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.இந்த வழக்கில், மற்றொரு நபரான செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமாருக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பியும், அசோக்குமார் ஆஜராகாமல், 393 நாட்களுக்கு மேலாக தலை மறைவாகவே இருந்து வருகிறார். அவர், வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விடக் கூடாது என்பதற்காக, லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தில் தலைமறைவாக இருப்பதாகவும், வெளிநாடு தப்பிவிட்டார் என்றும் இருவேறு தகவல் பரவி வருகின்றன. அவர் இதுவரை அமலாக்கத் துறையினரிடம் சிக்கவில்லை. அவரை, கைது செய்ய தமிழக போலீசார் ஒத்துழைக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.கரூர் அருகே தோரணகல்பட்டி, குன்னம்பட்டி பகுதியில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை, போலி ஆவணங்கள் தயார் செய்து கிரையம் செய்து கொண்டதாக, யுவராஜ் உள்ளிட்ட ஏழு பேர் மீது, கரூர் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் புகார் அளித்தார். கரூர் குப்புச்சிபாளையம் பிரகாஷ், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தன் நிலத்தை போலி பத்திரம் மூலம் அபகரித்து விட்டதாகப் புகார் அளித்தார். இந்த இரு வழக்குகளையும், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை, கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விஜயபாஸ்கர் தலைமறைவாகி, 31 நாள் ஆகியும், இதுவரை போலீசார் கைது செய்யவில்லை. விஜயபாஸ்கரை தேடி வரும் போலீசார், அவர் தொடர்புடைய ஆதரவாளர்கள். உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை; விசாரணை என காய் நகர்த்துகின்றனர்.அமலாக்கத்துறை மற்றும் போலீசாருக்கு கண்ணாமூச்சி ஆட்டம்காட்டி விட்டு தலைமறைவாக உள்ள அசோக் குமார், விஜயபாஸ்கர் ஆகியோரின் நடவடிக்கை, உயர் அதிகாரிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனைகரூரில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை, போலியான ஆவணங்களால் கிரையம் செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.வழக்குகளில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க, விஜயபாஸ்கர், முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை, இரு முறை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த, 7ல் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்பட, 7 இடங்களில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை மேற்கொண்டனர். கரூர் ஆண்டாங்கோயில் மேற்கு பஞ்சாயத்துக்குட்பட்ட அம்மன் நகரில் வசிக்கும் அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப மண்டல செயலாளரும், விஜயபாஸ்கரின் உறவினருமான கவின்ராஜ் தலைமறைவான நிலையில், அவரது வீட்டிலும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் அ.தி.மு.க., ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப அணி துணை தலைவர் பசுபதி செந்தில் உள்ளிட்ட, 7க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.மாஜி அமைச்சரை கைவிட்டதா தலைமை?கரூர் அ.தி.மு.க.,வினர் கூறியதாவது: அ.தி.மு.க., பிளவு உள்பட பல்வேறு பிரச்சனையின் போது, முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.,க்கு ஆதரவாக எம்.ஆர். விஜயபாஸ்கர் இருந்தார். அவர்கள், இரண்டு பேருக்கு இணக்கமான உறவு இருந்து வந்தது. கடந்த சட்டசபை தேர்தலில், மாவட்டத்தில் வாஷ்- அவுட் ஆனபின், இருவருக்குமான உறவில் மெல்ல விரிசல் விழுந்தது. 2021 ல் விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்த போது, இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்தார். தற்போது நில மோசடி வழக்கில், அவரை கைது செய்ய, சி.பி.சி.ஐ.டி., போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள், உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் பலரையும் போலீசார் தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.கடந்த ஜூலை 7 ல் மதுரை விமான நிலையத்தில், இ.பி.எஸ்., அளித்த பேட்டியின் போது, நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, எம்.ஆர்.,விஜயபாஸ்கர் பெயரை கூட சொல்லாமல்,'கண்டனம்' என கூறி, இ.பி.எஸ்.., நிறுத்தி கொண்டார். மேலும், கட்சி தலைமையில் இருந்த கண்டன அறிக்கை வெளியிட வேண்டும்; போராட்டம் அறிவிக்க வேண்டும் என, கரூர் மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு, 'அவரது தனிப்பட்ட வழக்கு என்பதால், கட்சி தலையிட முடியாது; அவர் தான் பார்த்து கொள்ள வேண்டும்' என, தலைமை கைவிரித்துள்ளது. இதனால், எம்.ஆர்., விஜயபாஸ்கரின் குடும்பத்தினரும், ஆதரவாளர்களும்அதிருப்தியில் உள்ளனர்.இவ்வாறு கூறினர்