கரூர் : கரூர் அருகே, கலை கூத்தாடிகளுக்கு பட்டா வழங்கியும் வீடு கட்டி தரப்படாததால், தார்பாய் கூடாரத்தில் வாழ்த்து வருகின்றனர்.கரூர் மாவட்டம், குப்பம் பஞ்., வேலாயுதம்பாளையம் அருகில், 94 குடும்பங்கள், 300க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், பல்வேறு மாவட்டங்களில் சர்க்கஸ் சாகசங்கள் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பட்டா வழங்கியும், வீடு கட்ட அரசு உதவி வழங்கவி ல்லை என்பதால், தார்பாய் கொட்டகையில் வசித்து வருகின்றனர்.இது குறித்து, கலைகூத்தாடிகள் கூறியதாவது: கடந்த, 45 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக கரூர் மாவட்டத்தில் தஞ்மடைந்தோம். இப் பகுதியில், 2 ஏக்கர் தனியார் நிலத்தில் தார்ப்பாய் கொட்டகை அமைத்து, நீண்டகாலமாக அடிப்படை வசதி இல்லாமல் வசித்து வருகிறோம். இலவச பட்டா வழங்குவதற்கு, 2020ல் குப்பம் பஞ்சாயத்துக்குட்பட்ட வேலாயுதம்பாளையத்தில், 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 94 வீடுகள் கட்டி தர ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், சட்டசபை தேர்தல் அறிவிப்பால் பணிகள் நின்று போனது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பல்வேறு போராட்டங்களுக்கு பின், 2021 டிசம்பரில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டன. அதற்கு கலைஞர் நகர் என பெயரிடப்பட்டு, அரசு சார்பில் சொந்தமாக வீடு, 2 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியும், 9.98 லட்சம் ரூபாய் மதிப்பில், 30,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிப்பறை கட்டும் பணி அமைக்கப்படும் என, அப்போதைய கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வின்போது தெரிவித்தார்.ஆனால் மேல்நிலை தொட்டி, குடிநீர் குழாய், கழிப்பறை கட்டி கொடுக்கப்பட்டது. வீடு கட்டித்தர எந்த ஏற்பாடும் செய்யவில்லை. பட்டா கொடுத்த இடத்தில், மீண்டும் தார்பாய் கொட்டகையில் வாழ்ந்து வருகிறோம். தெரு விளக்குகள் இருந்தும், வீடுகளில் மின்சார வசதி இல்லாமல் குழந்தைகள் படிக்க மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். விஷ ஜந்துக்கள் அடிக்கடி வீட்டில் நுழைந்து விடுவதால், பாதுகாப்பற்ற நிலையில் உள்ளோம். இவ்வாறு கூறினர்.