குளித்தலை;குளித்தலை அடுத்த சிவாயம் பஞ்., கீழஆரியபட்டி கிராமத்திலிருந்து, நேற்று முன்தினம் இரவு, மாரியம்மன் கோவிலுக்கு, மின் அலங்கார வாகனத்தில் பூ, பழத்தட்டுகளை எடுத்து சென்றனர். அப்போது, அய்யர்மலை - பணிக்கம்பட்டி நெடுஞ்சாலை, ஈச்சம்பட்டி பகுதியில் பட்டாசு வெடித்தனர். இதில் அப்பகுதியை சேர்ந்த பிரதீப், 24, என்பவர் மீது பட்டாசு வெடித்து காயம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியை சேர்ந்தவர்கள், பட்டாசு வெடிக்காமல் செல்லுங்கள் என தெரிவித்துள்ளனர். அப்போது, திருவிழாக்காரர்களான சுரேஷ், 40, பிரவீன், 35, சண்முகம், பூபதி ஆகியோர் தகாத வார்த்தையில் திட்டியுள்ளனர். இதை தட்டிக்கேட்ட சிறுவர்களை தாக்கியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள், குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.இதுகுறித்து, பிரதீப், 24, கொடுத்த புகார்படி, 4 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ், பிரவீன் ஆகிய இருவரை கைது செய்தனர். இதேவழக்கில் லதா, 40, கொடுத்த புகார்படி, 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.