மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
குளித்தலை: குளித்தலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, 22 ஆண்டுகளுக்கு பின், நேற்று விமரிசையாக நடந்தது. குளித்தலை, முத்து பூபால சமுத்திரம் பகுதியில் மகா மாரியம்மன், விநாயகர், முனீஸ்வரன், மதுரை வீரன் ஆகிய பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகுந்த பொருட்செலவில், கடந்த ஐந்தாண்டுகளாக கட்டுமான பணி நடந்தது வந்தது. திருப்பணி முடிந்ததையடுத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த, 13ல் குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டுவரப்பட்டது. புனிதநீர் அடங்கிய கும்பத்தை, யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, மகா கணபதி பூஜை, லட்சார்ச்சனை, நாடி சந்தனம், திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, மகா தீபாராதனை உள்ளிட்ட, நான்கு கால யாக கேள்வி பூஜை நடந்தது. நேற்று காலை, 4ம் கால யாக வேள்வி பூஜை செய்யப்பட்டு, புனிதநீர் கும்பத்தை, சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க மகா மாரியம்மன் கருவறை, ராஜகோபுரம், முனீஸ்வரன், மதுரை வீரன் சுவாமி, விமான கோபுரங்களின் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.திருப்பூர் மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினவேலு பாண்டியன், குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம், மாவட்ட பஞ்., துணைத்தலைவர் தேன்மொழி தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.