கரூர்: கரூர், வெண்ணைமலை கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு சீல் வைத்த போது, தர்ணாவில் ஈடுபட்ட கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆக்கிரமிப்பு கரூர் அருகே வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டதால், அதற்கான நடவடிக்கையில் அறநிலையத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கரூர் ஆத்துார் பூலாம்பாளையம் பஞ்.,குட்பட்ட சின்னவடுகப்பட்டியில், கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கண்ணம்மாள் என்பவரின் வீடுகளை கையகப்படுத்த, அறநிலையத்துறை அதிகாரிகள் கடந்த 17ல் சென்றனர். அப்போது, அனைத்து கட்சியினர், பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அதிகாரிகள் திரும்பினர். நேற்று காலை, 8:00 மணிக்கு, சின்னவடுகப்பட்டி கண்ணம்மாளின் வீடுகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில், அறநிலையத்துறை கரூர் உதவி ஆணையர் ரமணிகாந்தன் தலைமையிலான அதிகாரிகள் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும், கோவில் நிலத்தில் குடியிருப்பவர்கள், 500-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். வாக்குவாதம் கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி, அ.தி.மு.க., மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் அங்கு வந்தனர். கரூர் கூடுதல் எஸ்.பி., ஜெயச்சந்திரன் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஜோதிமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் திடீரென கேனுடன் வந்து தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, தர்ணாவில் ஈடுபட்ட ஜோதிமணி, விஜயபாஸ்கர் உட்பட, 400க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கண்ணம்மாள் வாடகைக்கு விட்டிருந்த 23 வீடுகளுக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள், 'சீல்' வைத்தனர். தொடர்ந்து, கரூர் எஸ்.பி., ஜோஸ் தங்கய்யா சம்பவ இடத்தை பார்வையிட்டார். வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டதை கண்டித்தும், 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாவல் நகரில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் போக்குவரத்து முடங்கியது. வாகனங்கள் 1 கி.மீ., துாரம் வரை நின்றன. மறியலில் ஈடுபட்ட, 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.