கழிவுநீர் ஓடையாக மாறிய இரட்டை வாய்க்கால்
கரூர், கழிவுநீர் ஓடையாக மாறிய, கரூர் இரட்டை வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் இரட்டை வாய்க்கால், ஆண்டாங்கோவிலில் தொடங்கி சின்ன ஆண்டாங்கோவில் படித்துறை, மக்கள் பாதை வழியாக ஜவகர் பஜார், மார்க்கெட் வழியாக அரசு காலனி வரை, 5 கி.மீ., வரை செல்கிறது. பல ஆண்டுகளுக்கு முன், பாசன வாய்க்காலாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில், மக்கள் தொகை பெருக்கம் காரணமாகவும், வயல் வெளிகள், குடியிருப்புகளாக மாறியதன் விளைவாகவும், வாய்க்காலை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளும் குடியிருப்பு பகுதிகளாக மாறி போனது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை வாய்க்காலில் கொட்டி விடுகின்றனர். வெளியேறும் கழிவுநீர், இரட்டை வாய்க்காலில் செல்வதால் துர்நாற்றம் வீசி வருகிறது. அவ்வப்போது, இரட்டை வாய்க்கால் துார்வாரப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டாலும், மீண்டும் குப்பை கொட்டும் இடமாக மாறி போனது. தற்போது வாய்க்கால் புதர்மண்டி காட்சியளிக்கிறது.மேலும், தண்ணீர் செல்ல வழியில்லாமல், வாய்க்கால் முழுவதும் குப்பை மேடாக மாறியுள்ளது. வாய்க்காலில் குப்பை கொட்டுவதை தடுக்கவும், கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், பிளாஸ்டிக் கழிவு பொருட்களை வாய்க்காலில் போடுவதை தவிர்க்கும் வகையில், 3.62 கோடி ரூபாய் மதிப்பில் மக்கள் பாதை முதல் மார்க்கெட் வரை வாய்க்காலின் மேல்பரப்பிலும் பக்கவாட்டின் இருபுறங்களிலும் கான்கிரீட் அமைத்து மூடப்பட்டன. ஆனால், சின்ன ஆண்டாங்கோவிலில் இருந்து, மக்கள் பாதை வரை இரட்டை வாய்க்கால் பகுதியில் செடிகள் முளைத்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. குப்பை மேடாகவும் மாறி வருகிறது. கொசுக்கள் அதிகம் உற்பத்தியாவதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரட்டை வாய்க்காலை முழுமையாக சுத்தம் செய்து கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.