அபயபிரதான ரெங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
கரூர், சித்திரை திருவிழாவையொட்டி, அபயபிரதான ரெங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.கரூர் மேட்டுத்தெருவில், பிரசித்தி பெற்ற அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், சித்திரை திருவிழா கடந்த, 2 முதல் நடந்து வருகிறது. தினமும் மாலை அன்னப்பறவை வாகனம், சிம்ம வாகனம், அனுமன் வாகனம், வெள்ளி கருட வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடந்தது. நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி உடனாகிய ரெங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் மணக்கோலத்தில் ரெங்கநாதர் எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை(10ம் தேதி) தேரோட்டம், 11ல் அமராவதி ஆற்றில் தீர்த்தவாரி, 12ல் ஆளும் பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.