குறுகிய மனப்பான்மையால் அ.தி.மு.க., வழக்கு தொடர்ந்தது: செந்தில்பாலாஜி
கரூர், ''குறுகிய மனப்பான்மையால், அ.தி.மு.க., வழக்கு தொடர்ந்தது,'' என, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேட்டில், 'உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்' நேற்று நடந்தது. இதில், கரூர் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி பங்கேற்றார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக சட்டசபை தேர்தல், இன்னும் எட்டு மாதங்களில் நடக்க இருப்பதால், உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில், பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முன்னிலையில் சென்று கொண்டு இருக்கிறது. இதை பொறுத்து கொள்ள முடியாமல், குறுகிய மனப்பான்மையால், அ.தி.மு.க., எம்.பி.,சண்முகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் சிறப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது.ஓரணியில் தமிழ்நாடு என்ற தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையில், யாரையும் கட்டாயப்படுத்தி சேர்க்கவில்லை. அவர்களே விருப்பப்பட்டு சேர்கின்றனர். எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., இதுவரை நடந்த, 10 தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்துள்ளார். 11வது முறையாக சந்திக்க உள்ள சட்டசபை தேர்தலிலும், மக்கள் அவருக்கு தோல்வியை பரிசாக வழங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.