அருணா ஜெகதீசன் ஆணையம் வரும் 11ல் மீண்டும் விசாரணை
கரூர் கரூரில், த.வெ.க., பிரசார கூட்டத்தில் நடந்த உயிரிழப்பு தொடர்பாக வரும், 11 முதல் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையம் மீண்டும் விசாரிக்க உள்ளது.கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த, 27ல் நடந்த த.வெ.க., பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி, 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது.இதையடுத்து ஆணைய தலைவர் அருணா ஜெகதீசன், சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த, 28ல் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஆணையம் அமைத்ததற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டது.இதனால் வரும், 11 முதல் மீண்டும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம், கரூரில் விசாரணையை மேற்கொள்ள உள்ளது.அதற்காக, கரூரில் ஆணைய அலுவலகம் அமைப்பது உள்ளிட்ட, பல்வேறு பணிகளை வருவாய் துறை அதிகாரிகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.