கோல்கட்டா தீ விபத்தில் பலியான மூவரின் உடல் கரூரில் அடக்கம்
கரூர்:கோல்கட்டாவில் நடந்த தீ விபத்தில், உயிரிழந்த கரூரை சேர்ந்த மூன்று பேரின் உடல் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன், ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகில் ஜோதிவடத்தை சேர்ந்தவர் பிரபு, 40. இவர், கற்றாழையிலிருந்து கிடைக்கக்கூடிய மூலப் பொருள்களை கொண்டு, வாசனை திரவியம் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். பிரபு மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் தியா, 10, ரிதன், 3, அவரது மாமனார் முத்துகிருஷ்ணன், 61, ஆகியோருடன் கோல்கட்டாவிற்கு வந்துள்ளார். பின் அங்குள்ள ரிதுராஜ் ஹோட்டலில் குடும்பத்துடன் தங்கினார்.கடந்த, 29 இரவில் நடந்த தீ விபத்தின் போது, ஹோட்டலில் தாங்கிருந்த, 14 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டும், தீயில் கருகியும் உயிரிழந்தனர். அதில் முத்துகிருஷ்ணன், அவரது பேரக்குழந்தைகள் தியா, ரிதன் ஆகிய மூன்று பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன், உயிரிழந்தவர்களின் உடல் கோல்கட்டாவில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.பின் அங்கிருந்து, மூன்று ஆம்புலன்ஸ் உதவியுடன் கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகில் ஜோதிவடத்திற்கு மூவரின் உடல்கள் கொண்டு வரப்பட்டன. உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் கண்ணீர் விட்டு அழுதனர். இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கரூர் எம்.பி., ஜோதிமணி பங்கேற்று, துயரத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.