உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கருப்பசாமி கோவில் ஆடி மாத பூஜை சுமூகமாக நடத்த இருதரப்பினர் முடிவு

கருப்பசாமி கோவில் ஆடி மாத பூஜை சுமூகமாக நடத்த இருதரப்பினர் முடிவு

குளித்தலை, குளித்தலை அடுத்த, பாலவிடுதி பஞ்., சிங்கம்பட்டியில் வந்தவழி கருப்பசாமி கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத கடைசி வாரத்தில், பூஜை நடத்தி கிடா வெட்டுவது வழக்கம். இந்நிலையில், சிங்கம்பட்டி பொதுமக்கள் சார்பாக ஒரு தரப்பினர், கரூர் கலெக்டர் தங்கவேலை சந்தித்து மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:சிங்கம்பட்டி கருப்பசாமி கோவிலில், ஆடி மாத கடைசி வியாழன் அன்று, கிராமத்தில் உள்ள அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களிடம் இருந்து, கோவில் தர்மகர்த்தா நன்கொடை பெற்று பூஜை செய்வது வழக்கமாக உள்ளது. ஆனால் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களின் உபய பொருட்களை தர்மகர்த்தா பெறாமல் உள்ளார். எனவே, எங்களுக்கும் பூஜையில் உரிய மரியாதை அளித்து நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டிருந்தது.இதையடுத்து, நேற்று காலை கோவில் முன், ஹிந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சந்திரசேகர், தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில், வருவாய் துறை அலுவலர்கள், கோவில் அலுவலர்கள், கோவில் தர்மகர்த்தா மூர்த்தி, சிங்கம்பட்டி திருவேங்கடம் ஆகிய இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவர்த்தை நடத்தினர்.இதில் இன்று நடைபெறும் பூஜையை, அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்து தர்மகர்த்தாவின் கீழ், கோவில் நிர்வாக பணிகள் நடைபெறும் என்றும், இதேபோல் அனைத்து பணிகளும் பாகுபாடு பார்க்காமல் சமமாக செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இன்று, 500க்கும் மேற்பட்ட கிடா வெட்டி பொது அன்னதானம் வழங்கப்படவுள்ளது.இரு தரப்பினரும், சட்டம் ஒழுங்குக்கு பங்கம் ஏற்படாமல் விழாவை நடத்தவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு அவர்கள் அமைதியாக நடந்து கொள்வதாக முடிவு எடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை