அரசு பள்ளியில் ஆசிரியர் தொல்லை கரூர் கலெக்டரிடம் சிறுவன் மனு
கரூர், அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும், 14 வயது சிறுவன், தனக்கு ஆசிரியர் தொல்லை கொடுப்பதால் மன உளைச்சலில் இருப்பதாக, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.அதில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், மணவாசி அருகில் வளையல்காரன்புதுாரில் வசித்து வருகிறேன். நான், கருப்பூரில் உள்ள அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறேன். எனது குரல் பெண் குரல் போல இருக்கும். இங்குள்ள பள்ளி ஆசிரியர் ஒருவர், என்னை தொடர்ந்து கிண்டல் செய்து பேசுவது, தொடக்கூடாத இடங்களில் தொடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். படிப்பில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. புகார் அளித்தால், பள்ளியை விட்டு வெளியேற்றி விடுவேன் என்று, அந்த ஆசிரியர் மிரட்டி வருகிறார். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது