ட்ரோன் மூலம் கட்டடங்கள் அளவு: கவுன்சிலர்கள் எதிர்ப்பால் ரத்தானது
ட்ரோன் மூலம் கட்டடங்கள் அளவு: கவுன்சிலர்கள் எதிர்ப்பால் ரத்தானதுஈரோடு, நவ. 28-ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சொத்து வரி குறைவாக விதிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் பயன்பாட்டுக்கு மாற்றப்பட்ட கட்டடங்கள் ஆகியவற்றை, ட்ரோன் மூலம் அளவீடு செய்து வரி விதிக்கும் முறைக்கு, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.ஈரோடு மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். துணை மேயர் செல்வராஜ், இணை ஆணையர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாநகராட்சி நான்காம் மண்டலத்தில், கொல்லம்பாளையம் பகுதியில் சிறுபாலம் சீரமைப்பு, அம்ருத் பூங்கா, அம்மா உணவகம், நீருந்து நிலையம், மின் மோட்டார், மேல்நிலை தொட்டி, தானியங்கி வால்வுகள் போன்றவைகளை பராமரிப்பு செய்வது, மண்டல அலுவலகத்தில் யு.பி.எஸ். மற்றும் ஜெராக்ஸ் இயந்திரம் பழுது சரிபார்ப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள ரூ.29.91 லட்சம் நிதி ஒதுக்குவது என்பன உள்ளிட்ட, 34 தீர்மானங்கள் மாமன்றத்தில் கவுன்சிலர்களின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.இதில் மூன்றாவது தீர்மானமாக, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி குறைவாக விதிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் பயன்பாட்டுக்கு மாற்றப்பட்ட கட்டடங்கள் ஆகிய இனங்களை, ட்ரோன் மூலம் அளவீடு செய்து, வரி விதித்து மாநகராட்சியின் வருவாயை உயர்த்த பரீட்சார்த்த முறையில் இரு வார்டுகளில் பணிகளை மேற்கொள்ள தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அது ரத்து செய்யப்பட்டு மீதமுள்ள, 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது: மரப்பாலத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள ஆடுவதை கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். நிதிக்குழு, பணிக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும். 46, 51வது வார்டுகளில், இரண்டு மாதத்துக்கு மேலாக முறையாக குடிநீர் வினியோகிக்கவில்லை. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். 45வது வார்டில் சமுதாயக்கூடம் அமைக்க, இரண்டரை ஆண்டுக்கு முன்பாக, 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை கட்டுமான பணிகள் தொடங்கவில்லை. ஈரோடு மேட்டூர் சாலையில், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்த அரசு மருத்துவமனை மேம்பாலத்தை விரிவுப்படுத்திட, மண் பரிசோதனை நடத்தப்பட்டது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெரும்பாலான மின்விளக்குள் பழுதடைந்துள்ளன. ஈரோடு மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை, வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருவதால், மலை போல் குவிந்து காணப்படுகிறது. அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பல்வேறு உபாதைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வெண்டிபாளையம் குப்பை கிடங்கை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.