குளித்தலையில் பணம், நகை கொள்ளை முகமூடி கொள்ளையர்களின் கார் பறிமுதல்
குளித்தலை, முகமூடி கொள்ளையர்கள் தப்பிச்சென்ற, பதிவு எண் இல்லாத கார், தோகைமலை போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.குளித்தலையில், நேற்று முன்தினம் அதிகாலை தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் தாய், மகளை ஆயுதங்களால் தாக்கி, 9 லட்சம் ரூபாய், 31 பவுன் நகை பறித்த முகமூடி கொள்ளையர்கள் தப்பிச் சென்ற காரை, குளித்தலை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். குளித்தலை, அண்ணா திருமண மண்டபம் அருகில் வசித்து வருபவர் கருணாநிதி. இவர் அரசு கல்லுாரியில் ஓய்வு பெற்ற முதல்வர். இவரது மனைவி சாவித்திரி, குளித்தலையில் கலைமகள் மெட்ரிக் பள்ளியின் தாளாளராக உள்ளார். கடந்த 18ம் தேதி அதிகாலை வீட்டில் துாங்கி கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த மூன்று மர்ம நபர்கள் மாடியில் தனியாக துாங்கிய இளைய மகள் பல் மருத்துவர் அபர்ணாவை, ஆயுதங்களால் தாக்கி மரண பயத்தை ஏற்படுத்தி பணம், நகை கேட்டு மிரட்டினர். மகள் சத்தம் கேட்டு, வந்த தாய் சாவித்திரியையும் அரிவாளால் வெட்டினர்.இதையடுத்து, முகமூடி கொள்ளையர்கள் வீட்டிலிருந்த, 9 லட்சம் ரூபாய், 31 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு, பதிவு எண் இல்லாத காரில் குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலை வழியாக, தப்பி சென்றனர். அப்போது துவரங்குறிச்சி சாலை ஓரத்தில், கார் பழுது ஏற்பட்டதால் அதை நிறுத்தி விட்டு, முகமூடி கொள்ளையர்கள் மற்றொரு காரில் தப்பினர்.குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் போலீசார், காரை பறிமுதல் செய்து தோகைமலை போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தி உள்ளனர். முகமூடி கொள்ளையர்கள் துவரங்குறிச்சியில் இருந்து, மற்றொரு கார் மூலம் மதுரை செல்லும்போது, மேலுார் டோல் பிளாசாவில் பதிவான, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை கொண்டு, தனிப்படை விசாரணை செய்து வருகின்றனர்.