அனைத்து அரசியல் கட்சியினருடன் ஆலோசனை
குளித்தலை, குளித்தலை சப்-கலெக்டர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ தலைமை வகித்தார். குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தேர்தல் தனி தாசில்தார் ஜெயவேல் காந்தன், குணசேகரன், குளித்தலை நகராட்சி ஆணையர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.குளித்தலை சட்டசபை தொகுதி வாக்காளர்கள், அரசு விதிமுறைக்கு உட்பட்டு பெயர் சேர்த்தல் குறித்து எளிமையாக செயல்படுத்திட, அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை வாக்காளர்களிடம் வினியோகம் செய்து, திரும்பப் பெற்று வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்படும் என சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ தெரிவித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன், எஸ்.ஐ.ஆர்., குறித்து தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்காமல் தன்னிச்சையாக முடிவு செய்து விட்டு, தற்போது அமல்படுத்த அரசியல் கட்சிகளை நிர்பந்தப்படுத்துகிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.இதேபோல் வி.சிக., கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல், நாம் தமிழர் கட்சி கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய பொறுப்பாளர் செல்வம் ஆகியோரும் இதில் உடன்பாடு இல்லை என தெரிவித்தனர்.சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, உங்களது கருத்துகள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்படும் என்றார்.