மேலும் செய்திகள்
நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
19-Sep-2025
கரூர், '' கல்லுாரிகளில் உள்ள, நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என, லோக் ஆயுக்தா உறுப்பினர் ராம்ராஜ் பேசினார்.கரூர் அரசு கலைக்கல்லுாரி யில், மாணவர் நுகர்வோர் சங்கம் சார்பில், நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம், கல்லுாரி முதல்வர் சுதா தலைமையில் நேற்று நடந்தது. அதில், தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் ராம்ராஜ் பேசியதாவது:இந்தியா முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் நுகர்வோர் நீதிமன்றம் உள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நுகர்வோர் நீதிமன்றங்களில், ஐந்து லட்ச ரூபாய் வரை நிவாரணம் கேட்க, கட்டணம் செலுத்த வேண்டாம். ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் நிவாரணம் கோரினால், குறைந்தளவிலான நீதிமன்ற கட்டணமே செலுத்த வேண்டும்.கடந்த, 2019ல், புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட பிறகு, வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. கல்லுாரிகளில் உள்ள, நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள், அனைத்து கிராமங்களிலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து, உள்ளாட்சி அமைப்புகள் விழிப்புணர்வு பலகைகளை வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.கருத்தரங்கில், கல்லுாரி பேராசிரியர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
19-Sep-2025