கரூர், கரூர் மாவட்டத்தில், நேற்றும் தொடர்ந்து மழை பெய்ததால், மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.சென்யார் புயல் காரணமாக, கரூர் மாவட்டத்தில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை வரை மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. காலை, 10:00 மணிக்கு சற்று வெயில் அடிக்க தொடங்கியது. பிறகு, மீண்டும் வானம் மேக மூட்டமாக மாறியது. சில பகுதிகளில் மட்டும், விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) கரூர், 10.20, அரவக்குறிச்சி, 11.60, அணைப்பாளையம், 5.20, க.பரமத்தி, 4, குளித்தலை, 5.20, தோகைமலை, 3.60, கிருஷ்ணராயபுரம், 13, மாயனுார், 7, பஞ்சப்பட்டி, 14, கடவூர், 2, பாலவிடுதி, 9, மயிலம்பட்டி, 16 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 8.40 மி.மீ., மழை பதிவானது. * கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 2,857 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு, 7,620 கன அடியாக அதிகரித்தது. காவிரியாற்றில், சம்பா சாகுபடி பணிக்காக வினாடிக்கு, 6,500 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 620 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 165 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 23.02 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. அணைப்பகுதியில், 12 மி.மீ., மழை பெய்தது.