தடுப்பணை சாலை சேதம்; சீரமைக்க மக்கள் கோரிக்கை
கரூர்: செட்டிப்பாளையம் தடுப்பணை சேதமாகி விட்டதால், அதை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் அருகே, செட்டிப்பாளையத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே, தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அதன் மூலம், 2,200 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில் உள்ள அமராவதி அணையில் இருந்து, திறந்து விடப்படும் தண்ணீர், இந்த தடுப்பணையில் தேக்கி வைக்கப்படுகிறது.விடுமுறை நாட்களில், கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தடுப்பணையை பார்க்க ஏராளமானோர் வருகின்றனர். தடுப்பணை செல்லும் சாலை, பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இங்கு பல இடங்களில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் சாலை உள்ளது.அப்பகுதியில் போதிய தெரு விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் குண்டும், குழியுமான சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். செட்டிப்பாளையம் தடுப்பணைக்கு செல்லும் தார்ச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.