தரமற்ற முறையில் அமைத்த கான்கிரீட் தரைதளம் சேதம்
தர்மபுரி, நவ. 3-தர்மபுரி அடுத்த, கடகத்துார் பஞ்.,க்கு உட்பட்ட சோழராயன் ஏரிக்கரை அருகே, ஈமச்சடங்கு செய்ய தண்ணீர் தொட்டி மற்றும் களம் அமைக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன், 7 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார். இதன் மூலம், ஆழ்துளை கிணறு அமைத்து, மின்மோட்டாருடன், ஈமச்சடங்கு செய்வதற்கான தண்ணீர் தொட்டி மற்றும் கான்கிரீட் களம் உள்ளிட்டவை, கடந்த, 6 மாதத்திற்கு முன், கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந் நிலையில், கான்கிரீட் களத்தின் தரை சேதமாகி, அதில் செடிகள் முளைத்துள்ளன. இதனால், கான்கிரீட் களம் முழுவதும் சேதமடையும் நிலை உள்ளது.பொதுமக்களின் தேவை கருதி, அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை, பெயரளவில் செய்யாமல், தரமான முறையில் செய்ய வேண்டும் எனவும், தற்போது சேதமாகிய கான்கிரீட் தரையை சீரமைக்கவும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.